மது அருந்திவிட்டு குளித்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி மைசூருவை சேர்ந்தவர் சாவு நண்பர்களுடன் பலமுறி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
மது அருந்திவிட்டு குளித்தபோது, காவிரி ஆற்றில் மூழ்கி மைசூருவை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். அவர் நண்பர்களுடன் பலமுறி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மண்டியா,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மைசூரு மச்சேகவுடன கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 35). இவர் தனது நண்பர்கள் சிலருடன் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பலமுறி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளார். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்கு அதிகளவு தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில், ஜெயராம் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தனர். அந்த சமயத்தில் ஜெயராம் காவிரி ஆற்றில் மூழ்கி தத்தளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், ஜெயராமை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர்.எஸ். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஜெயராமின் உடலை மீட்டனர். போலீசார் ஜெயராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயராம், மது அருந்துவிட்டு காவிரி ஆற்றில் குளித்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கே.ஆர்.எஸ். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story