காளிதாஸ் கோலம்கர், கணேஷ் நாயக் பா.ஜனதாவில் சேருகிறார்கள்
காங்கிரசின் காளிதாஸ் கோலம்கர் எம்.எல்.ஏ., தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் கணேஷ் நாயக் ஆகியோர் பா.ஜனதாவில் சேருகிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அணிமாறும் தலைவர்களால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இவ்விரு கட்சிகளும் அடுத்து வர உள்ள சட்டசபை தேர்தலுக்கு முழு உத்வேகத்துடன் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அக்கட்சிகளை உதறி விட்டு பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அப்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்து எம்.பி.யாகி விட்டார்.
பின்னர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து மந்திரி பதவியையும் வசப்படுத்தி கொண்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்தநிலையில் மும்பை வடலா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் கட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் நாடாளுமன்ற தேர்தலின் போதே தனது அலுவலகத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் படத்தை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாளை(புதன் கிழமை) பா.ஜனதாவில் இணைகிறார்.
காங்கிரஸ் கட்சியை போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் அக்கட்சியில் இருந்து விலகி கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அக்கட்சியின் பீட் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர், சகாப்பூர் எம்.எல்.ஏ. பாண்டுரங் வரோரா ஆகியோர் சிவசேனாவில் சேர்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தேசியவாத காங்கிரசின் மும்பை தலைவராக இருந்த சச்சின் அஹிர் அண்மையில் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.
இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பேரிடியாக நவிமும்பையின் சக்தி வாய்ந்த அக்கட்சி தலைவரான கணேஷ் நாயக் மற்றும் அவரது மகன் சந்தீப் நாயக் எம்.எல்.ஏ. ஆகியோர் பா.ஜனதாவில் சேர முடிவு செய்து உள்ளனர்.
இவர்களுடன் நவிமும்பை மாநகராட்சியை சேர்ந்த 52 தேசியவாத காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களும் பா.ஜனதாவில் சேருகிறார்கள். நேற்று கணேஷ் நாயக் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நாளை காலை 11.35 மணியளவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைகிறார்கள்.
சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கணேஷ் நாயக் மற்றும் அவரது மகன் பா.ஜனதாவில் சேர இருப்பது நவிமும்பையில் தேசியவாத காங்கிரசுக்கு பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது. கணேஷ் நாயக் 2014 சட்டசபை தேர்தலின் போது 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவி இருந்தார்.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் அவரது மூத்த மகன் சஞ்சீவ் நாயக் தானே தொகுதியில் சிவசேனாவிடம் படுதோல்வி அடைந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சோபிக்காத சலிப்பில் கணேஷ் நாயக் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பா.ஜனதாவில் இணையும் முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் அணி மாறுவது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story