அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி செல்வதாகக்கூறி இந்து முன்னணி-விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் லாரியை மறித்ததால் பரபரப்பு


அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி செல்வதாகக்கூறி இந்து முன்னணி-விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் லாரியை மறித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு அதிகமாக லாரியில் மாடுகளை ஏற்றி செல்வதாகக்கூறி இந்து முன்னணி- விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் சுமார் 26 மாடுகளை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் வாங்கி உள்ளார். பின்னர் அவர் அந்த மாடுகளை ஒரு லாரியில் ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தார். லாரியை குளந்திரான்பட்டி பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்பவர் ஓட்டினார். அவருடன் துணைக்கு 3 பேர் வந்தனர்.

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே லாரி வந்தபோது, இந்து முன்னணியினர் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக லாரியில் மாடுகளை ஏற்றி செல்வதாகக்கூறி லாரியை மறித்து அருகே உள்ள பொது அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் தெரிந்த சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் பொது அலுவலக வளாகத்திற்குள் திரண்டனர். இதனால் பொது அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

போலீசார் விசாரணை

இதற்கிடையில் லாரியில் இருந்த மாடுகளை லாரியை விட்டு கீழே இறக்கினர். அப்போது 6 மாடுகள் இறந்த நிலையில் இருந்தன. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் பொது அலுவலக வளாகத்திற்கு திரண்டு நின்றவர்களை அங்கிருந்து விரட்டினர்.

பின்னர் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் மற்றும் லாரியை மறித்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாடுகளை 2 லாரிகளில் ஏற்றி புதுக்கோட்டை நகராட்சியில் கால்நடைகள் பராமரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து 2 தரப்பினரிடம் புகார்களை பெற்று டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story