‘குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம்’ - கிராம மக்கள் அறிவிப்பு


‘குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம்’ - கிராம மக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 July 2019 4:00 AM IST (Updated: 30 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

‘குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம்’ என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்தனர். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தின்போது, தெப்பம்பட்டியை சேர்ந்த பழங்குடியின மக்கள் 30 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டுகளுடன் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் குடிநீர் வசதி இல்லை. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

அந்த மக்களிடம் ரேஷன் கார்டுகள் கொண்டு வந்தது குறித்து கேட்டபோது, ‘குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம். தற்போது மனு அளிக்கும் போதே நம்பிக்கையான பதில் கிடைக்காவிட்டால் இப்போதே ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைப்போம்’ என்றனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்காமல் திரும்பிச் சென்றனர்.

போடி நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிட 5 குடும்பங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் 5 குடும்பங்களையும் சேர்ந்த 25 பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து விடுவோம்’ என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு 21 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவை சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக 5 வீடுகள் முழுவதும் இடிந்து தரைமட்டமாக உள்ளது. எனவே வீடுகளை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

தேனி மாவட்ட அனைத்து நாடார் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் நாடார் அளித்த மனுவில், ‘மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை தோறும் மனு கொடுக்க வரும் சிலர், எந்த முன் அனுமதியும் இன்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் மலைச்சாமி அளித்த மனுவில், ‘வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சின்னமனூர், தேனி வாரச்சந்தைகளுக்கு காய்கறிகள் வாங்கச் செல்கின்றனர். இதனால் அவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே வீரபாண்டியில் வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

சீர்மரபினர் நலச்சங்க மாநில விவசாய அணி தலைவர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘மத்திய அரசு சீர்மரபினர் மக்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டத்தை தமிழகத்துக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். 1979-ம் ஆண்டு வரை வழங்கியது போல் இலவச உயர்கல்வி வழங்க வேண்டும். சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட தொடர்ந்து வலியுறுத்தி வரும்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story