புதுவையில் திடீர் மழை; பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி


புதுவையில் திடீர் மழை; பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 July 2019 4:00 AM IST (Updated: 30 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி,

புதுவை மற்றும் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நிலைமை மாறி பகலில் வெயில் கொளுத்தியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீசியது.

மாலை 6 மணி முதல் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. 6.30 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்த மழை நேற்று நள்ளிரவு வரை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

புதுவையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பியவர்கள் பலர் மழையில் சிக்கி தவித்தனர். சிலர் மழைகோர்ட்டு அணிந்தபடியும், குடைகளை பிடித்த படியும் சென்றனர். ஒருசிலர் மழையில் நனைந்தபடியே செல்வதை காண முடிந்தது.

இதே போல் தவளக்குப்பம், பாகூர் உள்பட புதுவை சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்தது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story