கர்நாடகாவில் 17 பேர் பதவி நீக்கம்: கட்சி தாவ நினைக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் - நாராயணசாமி பேட்டி


கர்நாடகாவில் 17 பேர் பதவி நீக்கம்: கட்சி தாவ நினைக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 30 July 2019 5:15 AM IST (Updated: 30 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது கட்சி தாவ நினைக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பாடம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்–அமைச்சர் குபேரின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதி பூங்கா அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு பாரதீய ஜனதாவினர் ரூ.30 கோடி தருவதாக பேரம் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசி பதிவாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, பேரம் பேசுவது, ராஜினாமா செய்ய வைப்பது செயல்களை கர்நாடகா மட்டுமின்றி பல மாநிலங்களில் பாரதீய ஜனதா செய்து வருகிறது.

அருணாசல பிரதேசம், மணிப்பூர், உத்ரகாண்டு, கோவா ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாவினர் இதைத்தான் செய்துள்ளனர். கோவாவில் பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துள்ளனர். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்துள்ள முடிவு கட்சித்தாவும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பாடம். மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 3–ல் 2 பங்கு பேர் மாறினால்தான் அவர்களை அங்கீகரிக்க முடியும். அதற்கு கீழ் கட்சி மாறுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவது தவறு. அவ்வாறு செயல்பட்டால் பதவி பறிபோய் விடும் என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. கர்நாடக சபாநாயகர் எடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரையும் சட்டமன்ற கூட்டத்திற்கு வர கொறடா உத்தரவு போட்டார். ஆனால் 17 பேரும் வரவில்லை. பின்னர் சபாநாயகர் அழைத்தபோதும் அவர்கள் வரவில்லை. இதனால் அவர்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இது மற்ற மாநிலங்களில் கட்சி தாவ நினைக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு பாடம்தான். யார் கட்சி விலகினாலும் பதவி போய்விடும். எந்த காலத்திலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.

மத்திய அரசு விதிமுறைகளை மீறி 6 விமான நிலையங்களை பராமரிக்கும் பணியை அதானி குழுமத்துக்கு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தனது எதிர்ப்பினை பாராளுமன்றத்தில் தெரிவிக்கும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story