ஆசனூர் அருகே பேரன் சாவில் சந்தேகம் என முதியவர் புகார்: தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை
ஆசனூர் அருகே பேரன் சாவில் சந்தேகம் என முதியவர் புகார் அளித்ததால், புதைக்கப்பட்ட உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள புளிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 24). இவர் சத்தியமங்கலத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். கணேசனின் தாத்தா சேதுராமனின் (62) வீடு ஆசனூர் அருகே கோட்டாடையில் உள்ளது. இவரிடம் கணேசன் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த, ரூ.2 லட்சத்தை வாங்குவதற்காக கடந்த 1 மாதத்துக்கு முன்பு கோட்டாடை சென்று தங்கினார்.
சம்பவத்தன்று கணேசன் அந்த பகுதியில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை கோட்டாடை பகுதியிலேயே புதைத்தனர்.
இந்தநிலையில் கணேசனின் தாத்தா சேதுராமன் ஆசனூர் போலீசில் அளித்த புகாரில், தனது பேரன் கணேசன் சாவில் மர்மம் உள்ளது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று கோட்டாடை கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன், தாசில்தார் பெரியசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கோட்டாடையில் கணேசன் புதைக்கப்பட்ட இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் ஜெய்சிங், பேரானந்தம் ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர் கணேசன் பிணத்தை துப்புரவு பணியாளர்கள் தோண்டி வெளியே எடுத்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணேசனின் உடலை அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இது சுமார் ½ மணி நேரம் நடந்தது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘கணேசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடற்கூறுகளை ஆய்வுக்காக எடுத்துள்ளோம். ஆய்வு முடிந்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் கணேசன் எப்படி இறந்தார் என்று தெரியவரும்’ என்றனர்.
பிணம் தோண்டி எடுக்கப்பட்டதையொட்டி ஆசனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.