சென்னையில் மாயமான மகனை மீட்டு தர வேண்டும்; கலெக்டரிடம் பெற்றோர் மனு
சென்னையில் தங்கி படித்தபோது மாயமான மகனை மீட்டு தர வேண்டும் என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வெள்ளகோவிலை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரில் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் அருண் (வயது 19), காதுகேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தடகள வீரரான இவர் திருப்பூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்–2 வகுப்பு வரை படித்து முடித்தான்.
இதில் தேர்ச்சியடைந்த உடன் மேலும் படிக்க விரும்பினான். இதனால் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.–ல் விடுதியில் தங்கியிருந்து படிக்க ஏற்பாடு செய்து, அங்கு எனது மகனை சேர்த்தோம். இந்நிலையில் அருணுக்கு உடல்நிலை சரியில்லை, அழைத்து செல்ல வருமாறு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பேரில் சென்னைக்கு சென்றோம். அப்போது ஊருக்கு செல்வதாக அருண் கூறிக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தோம். ஆனால் என் மகன் இங்கு வரவில்லை. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 6 மாதமாகியும் இதுவரை சென்னையில் மாயமான என் மகனை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது மகனை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.