போலீஸ் கமி‌ஷனர் போல் பேசி மோசடி: மனைவியை கண்டுபிடித்து தர பணம் கொடுத்து ஏமாந்த வேன் டிரைவர் - மிமிக்கிரி ஆசாமி கைது


போலீஸ் கமி‌ஷனர் போல் பேசி மோசடி: மனைவியை கண்டுபிடித்து தர பணம் கொடுத்து ஏமாந்த வேன் டிரைவர் - மிமிக்கிரி ஆசாமி கைது
x
தினத்தந்தி 30 July 2019 5:00 AM IST (Updated: 30 July 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

வேன் டிரைவரிடம் போலீஸ் கமி‌ஷனர் போல் பேசி காணாமல் போன அவரது மனைவியை கண்டுபிடித்து தர பணம் பெற்று மோசடி செய்த மிமிக்கிரி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா உவரியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 29). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. வினோத்குமார் தனது மனைவி குறித்து உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அவரை தேடி வந்தார்.

இந்த நிலையில் வினோத்குமாரின் மனைவி பயன்படுத்திய செல்போன் எண், டவர் விவரத்தை பதிவு செய்த போலீசார் அவர் திருப்பூரில் இருப்பதாக தெரிவித்தனர். இதன் காரணமாக வினோத்குமார் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் தெரிவிப்பதற்காக இணையதளத்தில் செல்போன் எண்ணை தேடியுள்ளார்.

அப்போது திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர் என்று குறிப்பிட்டு செல்போன் எண் பதிவிடப்பட்டு இருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு வினோத்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய நபர், போலீஸ் கமி‌ஷனர் பேசுவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய வினோத்குமாரும், தனது மனைவி மாயமான விவரம் குறித்தும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறியுள்ளார்.

அந்த நபரும் கண்டுபிடித்து கொடுப்பதாகவும் அதற்கு செலவாகும் என்றும், குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கை கூறி அதில் ரூ.4 ஆயிரம் செலுத்துமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய வினோத்குமார் ரூ.4 ஆயிரத்தை கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி செலுத்தியுள்ளார். அதன்பிறகு தொடர்பு கொண்டு பேசும்போது மேலும் ரூ.3,500 செலுத்துமாறு தெரிவித்துள்ளார். மீண்டும் வினோத்குமார் கடந்த ஜூன் மாதம் 18–ந் தேதி ரூ.3,500 செலுத்தியுள்ளார்.

ஆனால் வினோத்குமாரின் மனைவியை தேடிய விவரம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த 17–ந் தேதி திருப்பூர் வருமாறு வினோத்குமாரிடம், அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பிய வினோத்குமார் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நின்றுகொண்டு மீண்டும், மாநகர போலீஸ் கமி‌ஷனர் என்று பதிவிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, அந்த நபர், வாலிபர் ஒருவரை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல் வாலிபர் ஒருவர் அங்கு சென்று தனது பெயர் முகமது இப்ராகிம்(20), போலீஸ் கமி‌ஷனர் தன்னை அனுப்பிவைத்தார். ரூ.1,500 கொடுக்குமாறு வினோத்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி ரூ.1,200–ஐ வினோத்குமார் முகமது இப்ராகிமிடம் கொடுத்துள்ளார். பின்னர் முகமது இப்ராகிம் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது வினோத்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதைத்தொடர்ந்து வினோத்குமார் சிறுபூலுவப்பட்டியில் உள்ள மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தெரிவித்து நடந்த விவரத்தை கூறியுள்ளார். அதன்பிறகே அந்த செல்போன் எண் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் எண் அல்ல என்பதும், வாலிபர் ஒருவர் தன்னை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமாரை சந்தித்து தான் ஏமாற்றப்பட்ட விவரம் குறித்து புகார் மனு கொடுத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். மாநகர துணை கமி‌ஷனர் பிரபாகரன் மேற்பார்வையில், உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசாமி குறித்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த ஆசாமி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை நேற்று முன்தினம் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிடிபட்டவர் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகரை சேர்ந்த முகமது இப்ராகிம்(20) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:–

முகமது இப்ராகிமின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சேரகுளம் ஆகும். இவரது குடும்பத்தினர் கர்நாடகாவில் இருந்தபோது அங்குள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு கிடைத்த வேலையை செய்துள்ளார். தந்தை இறந்து விட்டார். தாயாரும் பிரிந்து சென்று விட்டதால் முகமது இப்ராகிம் மட்டும் திருப்பூர் வந்துள்ளார். நெசவாளர் காலனியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை. இதனால் பனியன் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு அவரை நீக்கியுள்ளனர்.

இதனால் வேலைக்கு செல்ல முடியாத முகமது இப்ராகிம் செல்போனில் டிக்டாக், வாட்ஸ்–அப், முகநூல் அதிகமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் செலவுக்கு பணம் இல்லாததால், மற்றவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் வகையில் இணையதள பக்கத்துக்கு சென்று போலியாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் என்றும், அதில் தான் வைத்திருந்த செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் வினோத்குமார், இணையதளத்தில் தேடியபோது திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் செல்போன் எண்ணுக்கு பதிலாக முகமது இப்ராகிமின் எண் கிடைத்துள்ளது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய வினோத்குமாரிடம், தனது நண்பர்களின் வங்கிக்கணக்கை கொடுத்து அவரிடம் இருந்து பணம் பெற்று முகமது இப்ராகிம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுபோல் பலரிடம் இதுபோல் மாநகர போலீஸ் கமி‌ஷனர் போல் பேசி முகமது இப்ராகிம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து முகமது இப்ராகிம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் போல் வாலிபர் செல்போனில் பேசி பலரிடம் பணம் பறித்த இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான முகமது இப்ராகிம் செல்போனில் டிக்டாக் செயலியில் பலரைப்போல் மிமிக்கிரி செய்து வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனரை போல் தனது குரலை மாற்றி, மிமிக்கிரி செய்து பலரிடம் பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த அழகுராஜா என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் சிக்கி தவித்து வந்துள்ளார். மனைவியை பிரிந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்த அழகுராஜா, மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த அழைப்பு முகமது இப்ராகிமுக்கு சென்றுள்ளது. அழகுராஜாவிடம் போலீஸ் கமி‌ஷனர் போல் பேசி அனைத்து விசயத்தையும் கேட்டறிந்துள்ளார்.

பின்னர் மனைவியை பிரித்துவைப்பதற்காக அழகுராஜாவிடம் ரூ.30 ஆயிரத்தை கேட்ட முகமது இப்ராகிம், தான் கொடுத்த வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அவரும் ரூ.30 ஆயிரத்தை செலுத்தி விட்டார். இதுபோல் அழகுராஜாவுக்கு தெரியாமல் அவருடைய மனைவியிடம் பேசியுள்ளார். அப்போது தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு அவர் கூறியுள்ளார். இதற்காக தனக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்குமாறு முகமது இப்ராகிம் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் ரூ.5 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இதுபோல் குடும்ப பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவித்த தனசேகரன் என்பவரிடம் ரூ.8 ஆயிரமும், மேலும் உடுமலையை சேர்ந்த அசோகாதேவி என்ற பெண்ணிடம் ரூ.2 ஆயிரத்தையும் முகமது இப்ராகிம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.


Next Story