சோழர் கால வணிக மையமாக திகழ்ந்த எஸ்.பி.பட்டினம் - மரபுநடை நிகழ்வில் தகவல்


சோழர் கால வணிக மையமாக திகழ்ந்த எஸ்.பி.பட்டினம் - மரபுநடை நிகழ்வில் தகவல்
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் சோழர் காலத்தில் வணிக மையமாக இருந்ததாக மரபுநடை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தொண்டி,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ள செய்யும் மரபு நடை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் 13-வது மரபுநடை நிகழ்ச்சி எஸ்.பி.பட்டினத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரையும் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் ஞானகாளிமுத்து வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமை தாங்கி பேசியதாவது:-

“முத்தூற்றுக் கூற்றத்து கீழ்கூற்று சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என கல்வெட்டுகளில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இப்பகுதியை கைப்பற்றிய பின்னர், சுத்தவல்லி என்ற இவ்வூர் பெயர் சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டிருக்கிறது. புரம், பேட்டை ஆகியவை வணிக நகரங்களை குறிக்கும் சொற்கள் ஆகும். எனவே சுந்தரபாண்டியன்பட்டினமும், சோழகன்பேட்டையும் இரட்டை வணிக நகரங்களாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த ஊர் மலைமண்டலமான சேர (கேரள) நாட்டுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. மலைமண்டலத்து காந்தளூரான எறிவீரபட்டினத்து ராமன் திருவிக்கிரமனான தேவேந்திர வல்லப பதினெண் பூமிச்சமைய சக்கரவத்திகள் என்பவர் இக்கோவிலுக்கு நிலதானம் வழங்கியுள்ளார். கி.பி.13-ம் நூற்றாண்டு கல்வெட்டில் சொக்ககூத்தர், தம்பிராட்டி என இறைவன், இறைவி பெயர் சொல்லப்பட்டுள்ளது. இதே கல்வெட்டில் ஆட்டை எனும் சோழர்கள் பயன்படுத்திய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் பாண்டியர் காலத்திலேயே ஒரு மடம் இருந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. தற்போதும் சிவன்கோவிலின் தெற்கே ஒரு மடம் உள்ளது. இதன் அமைப்பை கொண்டு இம்மடம் கி.பி.8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதலாம். இந்த மடத்துக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன.

இது பவுத்த மடமாக இருந்து பின் சைவ மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஒரு நாசிக்கூட்டில் புத்தரின் புடைப்பு சிற்பம் உள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.

இவ்வூரின் தெற்கே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் ஒரு பாதக்கோயில், ஒரு மடம் உள்ளது. இங்கு சமண மதத்தின் 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் சிறிய புடைப்பு சிற்பம் உள்ளது. இது ஒரு சமணப்பள்ளி என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 4 துண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. இவை திரிபுவன சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5-ம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் காணப்படுகிறது. இவர் அரசு அதிகாரியாக இருக்கலாம். இதில் ‘இத்தேசிநா’ என வரும் சொல் மூலம் வணிகர்கள் இக்கோவிலுக்கு நிலதானம் வழங்கியிருப்பதை அறிய முடிகிறது.

மேலும் சுந்தரபாண்டியன்பட்டினம், தீர்த்தாண்டதானம், வட்டாணம், தொண்டி உள்ளிட்ட ஊர்களில் கப்பல், படகு கட்டும் தொழில் நடந்திருக்கலாம். எஸ்.பி.பட்டினம் மற்றும் தொண்டியில் உள்ள ஓடாவி தெரு இதை உறுதிப்படுத்துகிறது. ஓடாவி என்பது மரக்கலம் செய்யும் தச்சர்களை குறிக்கும் சொல் ஆகும். இவ்வூர் அருகில் உள்ள எட்டிசேரி வணிகர்களான எட்டி செட்டிகளின் குடியிருப்பாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் அரியநாயகம், ஓய்வுபெற்ற நேவி கமாண்டர் நடராஜன், சிவரஞ்சனி, புல்லக்கடம்பன் முன்னாள் ஊராட்சி தலைவர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிவன் கோவில், சமணப்பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் நன்றி கூறினார்.

Next Story