மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 2 ஆயிரம் மீன்வளர்ப்பு கூண்டுகள் வழங்க நடவடிக்கை - பா.ஜ.க. மாநில துணை தலைவர் தகவல்


மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 2 ஆயிரம் மீன்வளர்ப்பு கூண்டுகள் வழங்க நடவடிக்கை - பா.ஜ.க. மாநில துணை தலைவர் தகவல்
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 2 ஆயிரம் மீன் வளர்ப்பு கூண்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநில துணை தலைவர் கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கிராமம், கிராமமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். முகாமில் அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 60 சதவீத அரசு மானியத்துடன் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீனவர்கள் பயனடைவார்கள். மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை அரசு தீவிரமாக கண்காணித்து சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். கடந்த 2017-18ம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக ரூ.472 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கையே காரணமாகும். இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட தலைவர் முரளி தரன், துணை தலைவர் குமார், செயலாளர் ஆத்மா கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் துரை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story