கீழடி அகழ்வாராய்ச்சியில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு
கீழடியில் நடந்து வரும் 5–ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, 4 அடி உயரம் கொண்ட பழங்கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய–மாநில அரசுகள் சார்பில் கடந்த 2015–ம் ஆண்டு முதல் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழரின் தொன்மையான வரலாற்றுக்கு ஆதாரமாக ஏராளமான பழங்கால பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தற்போது 5–ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இதற்காக விவசாயிகள் கருப்பையா, முருகேசன் ஆகியோரது நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதில் சிறிய மண்பானை, ஓடுகள், வட்ட வடிவிலான பெரிய பானை உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் முருகேசன் என்பவரது நிலத்தில் ஆய்வு பணிகள் நடைபெற்று, குழிகள் தோண்டிய போது அதில் இரட்டை சுவர் மற்றும் அதன் தொடர்ச்சியும் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் மாரியம்மாள், போதகுரு ஆகியோர் நிலங்களிலும் அகழாய்வு நடந்தது. இதிலும் சில பொருட்களும், சிறிய கட்டிட சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று முருகேசன் என்பவர் நிலத்தில் மேலும் குழிகள் தோண்டிய போது, 4 அடி உயரத்தில் சிறிய அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கிணறு பழைய மண் ஓடுகளால் சுற்றி கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், கூடுதலாக பல்வேறு பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.