ராஜபாளையம் அருகே கண்மாய் குடிமராமத்து பணிகளை தடுப்பவர் மீது நடவடிக்கை தேவை; கலெக்டரிடம் பாசனதாரர்கள் மனு


ராஜபாளையம் அருகே கண்மாய் குடிமராமத்து பணிகளை தடுப்பவர் மீது நடவடிக்கை தேவை; கலெக்டரிடம் பாசனதாரர்கள் மனு
x
தினத்தந்தி 30 July 2019 3:45 AM IST (Updated: 30 July 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே பிறாக்குடி கண்மாய் குடிமராமத்துப் பணிகளை தடை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாசனதாரர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின்போது பிறாக்குடி கண்மாய் பாசனதாரர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜபாளையம் அருகில் உள்ள பிறாக்குடி கண்மாயை குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் மராமத்து செய்திட கடந்த 27.6.2019 அன்று பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை முன்னிலையில் பாசனதாரர் சங்க நிர்வாக குழு தேர்வு செய்தது. மறைமுக தேர்தல் மூலம் நட்சாடலிங்கம் தலைமையில் நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. இக்குழுவினர் கண்மாய் குடிமராமத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 25-ந்தேதி ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் மராமத்து பணியை தடை செய்ய முயன்றார். நாங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் அவரை எச்சரித்து அனுப்பினர்.

மீண்டும் அவர் கடந்த 27-ந்தேதி மராமத்து பணியை செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தார். எனவே கிராம பாசனதாரர்கள் குடிமராமத்து பணியை தடையின்றி செய்திட சம்பந்தப்பட்ட தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story