பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம்: வக்பு வாரிய கல்லூரியில் முற்றுகை; 84 பேர் கைது


பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம்: வக்பு வாரிய கல்லூரியில் முற்றுகை; 84 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2019 3:45 AM IST (Updated: 30 July 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

வக்பு வாரிய கல்லூரியில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மதுரை,

மதுரை கே.கே.நகரில் வக்பு வாரியத்தின் கீழ் செயல்படும் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு புதிய பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க கோரியும், புதிதாக நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் வக்பு வாரிய கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது தலைமையில் பல்வேறு அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கல்லூரி முன்பு கூடினார்கள். பின்னர் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரியை முற்றுகையிட்டனர். இதனால் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென்று அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி கல்லூரிக்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கல்லூரிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அப்துல்சமது உள்பட 84 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story