பாளையங்கோட்டையில், கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம் - மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்
கோவில் பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறி பாளையங்கோட்டையில் கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட அமைப்பாளர் ஞானகுட்டி சுவாமிகள் தலைமை தாங்கினார். மாவட்ட இணை அமைப்பாளர் கண்ணன், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவுடையப்பன் ஆசிரியர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமானம் உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை தருவதாக அறிவித்தார். அவருடைய வழியில் நடக்கும் அ.தி.மு.க. அரசு பூசாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவேண்டும். பூசாரிகளுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும்.
அட்டை புதுப்பிக்காதவர்களுக்கு அட்டை புதுப்பித்து தரவேண்டும். கோவில் அறங்காவலர்கள் குழு நியமிக்கும் போது பூசாரியையும் அந்த குழுவில் இடம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அமைப்பாளர்கள் இசக்கியப்பன், மகாலிங்கம், முத்துக்குமார், பாலகிருஷ்ணன், சோமசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story