நாசரேத் அருகே, வேன்-லோடு ஆட்டோ மோதல் - மாணவர் உள்பட 3 பேர் காயம்
நாசரேத் அருகே வேன்-லோடு ஆட்டோ மோதிய விபத்தில் மாணவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அங்கு வேகத்தடை அமைக்க கோரி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி அழகியமணவாளபுரத்தைச் சேர்ந்தவர் சிந்தா ஆரிப். இவருடைய மகன் சுல்தான் பாஷில் (வயது 25). வேன் டிரைவர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை தினமும் தனது வேனில் நாசரேத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில் அவர்களை மீண்டும் வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவது வழக்கம்.
நேற்று காலையில் சுல்தான் பாஷில் வழக்கம்போல் மாணவ-மாணவிகளை தனது வேனில் ஏற்றிக்கொண்டு நாசரேத்துக்கு புறப்பட்டு சென்றார். நாசரேத் அருகே முதலைமொழி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த ஜாஹீர் உசேன் மகன் 7-ம் வகுப்பு மாணவரான ரகுமான் (13), வேன் டிரைவர் சுல்தான் பாஷில் மற்றும் லோடு ஆட்டோ டிரைவரான ஸ்ரீவைகுண்டம் அருகே தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த உலகமுத்து மகன் செந்தில் (34) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் வேனில் இருந்த மற்ற மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
இதற்கிடையே முதலைமொழி பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்வதால், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நாசரேத்-நெல்லை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தயானந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story