தூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 12:01 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 505 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரகப்பகுதிகளில் உள்ள குளங் கள், ஊருணிகள் தூர்வாரப்படும் என்று அறிவித்தார். இதற்காக மாநிலம் முழுவதும் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 422 சிறிய குளங்கள், 83 சிறுபாசன குளங்கள் ஆக மொத்தம் 505 குளங்கள் தூர்வாருவதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு தூர்வாரும் பணி தொடங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, வேறு எந்த திட்டத்திலும் தூர்வாரப்படாத குளங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. குளம் தூர்வாரும்போது ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும். வரத்துக்கால்வாயும் தூர்வாரப்படும். அடுத்த மழைக்காலத்துக்கு முன்பு குளங்களை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணையில் இருந்து கூடுதலாக 50 கனஅடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போது குடிநீர் வினியோகத்தில் சில மாற்றங்கள் செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உடன்குடி அனல்மின்நிலையத்தை பொறுத்தவரை கடலில் 8 கிலோ மீட்டர் தூரம் பாலம் கட்ட வேண்டும். இதில் 1 கிலோ மீட்டர் வரை பாலம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. அனல்மின்நிலையம் அமைய உள்ள பகுதியில் நிலம் சமப்படுத்தும் பணி நடந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story