கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் திடீர் மாயம் ஆற்றில் குதித்து தற்கொலையா? போலீஸ் விசாரணை
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழில் அதிபருமான சித்தார்த் திடீரென மாயமாகி உள்ளார்.
மங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழில் அதிபருமான சித்தார்த் திடீரென மாயமாகி உள்ளார். அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், மராட்டிய மாநில முன்னாள் கவர்னரும் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பின்னர் பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் ஏராளமான நிறுவனங்கள் நடத்தி வந்தார். கபே “காபி-டே”அதிபராக வலம் வந்த இவர் உலகம் முழுவதும் அதன் கிளைகளை அமைத்து நடத்தி வந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான மங்களூரு, சிக்கமகளூரு, பெங்களூரு உள்பட பல பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், கபே காபி-டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இது அப்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்போன் சுவிட்ச் ஆப்
இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். இந்த நிலையில் சக்லேஷ்புரா அருகே சென்ற போது டிரைவர் பசவராஜிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த் கூறியதாக தெரிகிறது. அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டி சென்றார்.
இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே பம்ப்வெல் சர்க்கிள் பகுதியில் கேரள செல்லும் சாலையில் உள்ள நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றது. அப்போது காரை நிறுத்தும்படி டிரைவரிடம், சித்தார்த் கூறியுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கிய சித்தார்த் தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்று உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆனபோதிலும் அவர் காரின் அருகே திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
பெரும் பரபரப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகி விட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் அனுமந்தராயாவுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரித்தனர். மேலும் சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று உள்ளூர் தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப்பார்த்தனர். இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தொழில் அதிபர் சித்தார்த் மாயமான விஷயம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இதுபற்றி அறிந்த எஸ்.எம்.கிருஷ்ணாவும், அவருடைய குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
யு.டி.காதர்
இதற்கிடையே நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல் படை குழுமத்தினர், மீனவர்கள் ஆகியோர் சித்தார்த்தை நேத்ராவதி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சித்தார்த்தை யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் மங்களூரு நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அவர் தங்கி உள்ளாரா? என்றும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே சித்தார்த் மாயமானது குறித்து அறிந்த முன்னாள் மந்திரியும், மங்களூரு தெற்கு தொகுதி(உல்லால்) எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் நேத்ராவதி ஆற்றின் பாலத்திற்கு வந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி மாயமான சித்தார்த்தை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
டிரைவரிடம் விசாரணை
இதனை தொடர்ந்து யு.டி.காதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சித்தார்த் காணாமல் போய் உள்ளார். அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீசாரும் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அங்கு வந்த தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சித்தார்த் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. 8 படகுகள், 2 கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் உதவியுடன் சித்தார்த்தை தேடும் பணி நடந்து வருகிறது“ என்றார்.
மாநகர போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா கூறுகையில், “சித்தார்த் மாயமாகி விட்டதாக டிரைவர் பசவராஜ் கங்கனாடி போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். ஆனால் அவரை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரிடம் கடைசியாக யார், யாரெல்லாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் டிரைவர் பசவராஜையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்“ என்றார்.
ஆறுதல்
இதற்கிடையே ஷோபா எம்.பி. தலைமையில் கர்நாடக எம்.பி.க்கள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் காணாமல் போய் உள்ளார். அவரை கண்டுபிடிக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சித்தார்த் மாயமானது குறித்து அறிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தேவேகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மந்திரிகள் டி.கே.சிவக்குமார், பிரியங்க் கார்கே, எச்.டி.ரேவண்ணா, சி.எஸ்.புட்டராஜூ, திரையுலகினர், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானோர் பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீட்டிற்கு வந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். தொடர்ந்து சித்தார்த்தை தேடும் பணி நடந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தார்த்துக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்களும் இச்சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story