வங்கிக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி - தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வங்கிக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஆத்தூர், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கிருந்து பல மாவட்டங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவுவதால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தென்னை விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பிச்சைமணி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் பெருமாள், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வறட்சியால் கருகிபோன தென்னை மரங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை கிலோ ரூ.120 ஆக உயர்த்த வேண்டும். மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியத்தொகையை நேரடியாக தென்னை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகளை திறக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் வங்கி கடனை முழுவதும் தள்ளுபடி செய்து, புதிதாக கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story