விளாத்திகுளம் அருகே மரம் முறிந்து விழுந்து இளம்பெண் பலி
விளாத்திகுளம் அருகே மரம் முறிந்து விழுந்ததில் இளம்பெண் பலியானார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே மரம் முறிந்து விழுந்ததில் இளம்பெண் பலியானார்.
பஸ் டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). இவர் கோவில்பட்டியில் தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (30). காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மாரீசுவரி (6) என்ற மகள் உள்ளார். இவள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று காலையில் வழக்கம்போல் முத்துலட்சுமி தன்னுடைய மகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் அங்குள்ள கண்மாயில் தூர்வாரும் பணிக்கு சென்றார்.
மரம் முறிந்து விழுந்து...
மதியம் வேலை முடிந்ததும், கண்மாயின் கரையில் உள்ள பழமைவாய்ந்த வேப்ப மரத்துக்கு அடியில் தொழிலாளர்கள் ஓய்வு எடுத்தனர். அந்த மரத்தின் தண்டு பகுதி கரையானால் அரிக்கப்பட்டு இருந்தது. இதனால் மரம் தண்டு பகுதியில் திடீரென்று முறிந்து விழுந்தது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தவாறு ஓடினர்.
அப்போது முத்துலட்சுமி சுதாரித்துக்கொண்டு ஓடுவதற்குள், மரம் அவர் மீது விழுந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரம் முறிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story