இன்று ஓய்வுபெற இருந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் புகாரில் நடவடிக்கை


இன்று ஓய்வுபெற இருந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் புகாரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 4:45 AM IST (Updated: 31 July 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

இன்று ஓய்வுபெற இருந்த நிலையில், நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

நாகையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன் (வயது 58). இவர் இன்று (புதன்கிழமை) ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் வெங்கட்ராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். தமிழக டி.ஜி.பி. திரிபாதியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெங்கட்ராமன் கடந்த 2015-ம் ஆண்டு திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றியவர். இவர் பணியாற்றிய காலத்தில் மாநகரில் ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போனில் ஆபாச வார்த்தைகளால் பேசினார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கட்ராமன் நாகர்கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சியை சேர்ந்தவர்

இந்த நிலையில் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில், “பெண் சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார் மீது நடவடிக்கையாக அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நாகர்கோவிலுக்கு பணியிட மாறுதலாகி சென்ற போது, அங்கும் ஒரு பிரச்சினையின் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரது சொந்த ஊர் திருச்சி குழுமணி ஆகும். திருச்சி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்” என்றனர். வெங்கட்ராமன் மீது புகார் அளித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் தரப்பினர் கூறுகையில், “வெங்கட்ராமன் மீதான புகார் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முடிவில் வெங்கட்ராமன் மீதான புகார் உண்மை என்று உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை போலீஸ் உயர் அதிகாரிகள் எங்களுக்கு தெரிவித்தனர். மேலும் உத்தரவுக்கான ஆணை நகல் எங்களுக்கு வர உள்ளது” என்றனர்.

Next Story