தென்திருப்பேரை அருகே தோட்டத்தில் தீ விபத்து; 5 ஆயிரம் வாழைகள் சேதம்


தென்திருப்பேரை அருகே தோட்டத்தில் தீ விபத்து; 5 ஆயிரம் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 31 July 2019 3:30 AM IST (Updated: 31 July 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் வாழைகள் கருகி சேதம் அடைந்தன.

தென்திருப்பேரை, 

தென்திருப்பேரை அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் வாழைகள் கருகி சேதம் அடைந்தன.

தோட்டத்தில் தீ விபத்து

தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ஆனந்த். விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம், தென்திருப்பேரை ஆற்றங்கால் பாலத்தை அடுத்த கடையனோடை ரோடு பகுதியில் உள்ளது. இவரது தோட்டத்தில் வாழை பயிரிட்டு உள்ளார். தற்போது வாழைகள் குலைகள் தள்ளிய நிலையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் இவரது தோட்டத்தில் காய்ந்த புற்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், நாலாபுறமும் தீ வேகமாக பரவியது. தோட்டத்தின் முள்வேலிகளிலும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் தோட்டத்தில் உள்ள வாழை, பனை, சீமைக்கருவேல மரங்கள் போன்றவை தீயில் கருகின.

5 ஆயிரம் வாழைகள் சேதம்

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தீயை அணைக்க போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 5 ஆயிரம் வாழைகள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து, ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story