சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 31 July 2019 3:45 AM IST (Updated: 31 July 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 20). இவர் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வந்த சிறுவனிடம் வினோத்குமார் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந்தேதி அந்த சிறுவனின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், அவனை மிட்டாய் வாங்கி தருவதாக வினோத்குமார் அழைத்துள்ளார். பின்னர் அவர் சிறுவனை அருகில் உள்ள சோள காட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுவனுக்கு வினோத்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி, போலீசார் வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 1 வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Next Story