பள்ளி விடுதியில் மாணவன் கத்தரிக்கோலால் குத்திக்கொலை - சக மாணவன் கைது


பள்ளி விடுதியில் மாணவன் கத்தரிக்கோலால் குத்திக்கொலை - சக மாணவன் கைது
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 8:06 PM GMT)

கொடைக்கானல் பள்ளி விடுதியில் மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டான். சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் பசுமை பள்ளத்தாக்கு அருகே பவான் சாந்தி வித்யாஸ்ரம் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஓசூர் நகர் பெங்களூரு ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் மகன் கபில் ராகவேந்திரா(வயது 15) என்ற மாணவனும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவனும் 10-ம் வகுப்பு படித்தனர்.

அத்துடன் ஒரே விடுதியில் தங்கியிருந்தனர். இதனால் இரு மாணவர்களும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் 16 வயது மாணவனின் நடவடிக்கை சரியில்லாமல் இருந்தது. இதனால் அந்த மாணவனை மேல்வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதியில் பள்ளி நிர்வாகத்தினர் தங்க வைத்தனர்.

இந்தநிலையில் 16 வயது மாணவனின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் கபில் ராகவேந்திராவும் அவனிடமிருந்து விலகியே இருந்தான். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. கடந்த 27-ந்தேதி கபில் ராகவேந்திராவிற்கும், 16 வயது மாணவனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் 16 வயது மாணவனின் சகோதரர் பற்றி கபில் ராகவேந்திரா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8.45 மணி அளவில் பள்ளி விடுதியில் உள்ள கழிவறையில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதனால் அங்கு பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 16 வயது மாணவன், கபில் ராகவேந்திராவை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்ததில் நெற்றி மற்றும் தலையில் பலத்த காயமும், கழுத்தில் கத்தரிக்கோலால் குத்துப்பட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவன் அருகில் கத்தரிக்கோல் கிடந்தது. இதனையடுத்து 16 வயது மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

பின்னர் அனைவரும் சேர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கபில்ராகவேந்திராவை கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையொட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவான 16 வயது மாணவனை தேடி பிடித்து கைது செய்தனர். அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

நானும், கபில் ராகவேந்திராவும் நண்பர்களாக பழகினோம். ஆனால் சில மாதங்களாக என்னுடன் அவன் சரியாக பழகுவது இல்லை. மேலும் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 27-ந்தேதி எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கபில் ராகவேந்திரா எனது சகோதரரை பற்றி அவதூறாக பேசினான். இதனால் நான் ஆத்திரமடைந்து கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்தும், கத்தரிக்கோலால் குத்தியும் கொலை செய்தேன்.

இவ்வாறு அவன் கூறி உள்ளான்.

Next Story