ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட அவல், சப்பரம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்


ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட அவல், சப்பரம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 31 July 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட அவல், சப்பரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கும்பகோணம்,

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பெண்கள் விரதமிருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்காக பெண்கள் ஆடி மாதத்தில் விரதம் மேற்கொள்கிறார்கள்.

ஆடி மாதத்தின் 18-ம் நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரியால் வளம்பெறும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் காவிரி ஆற்றை அம்மனாக பாவித்து படித்துறையில் அரிசி, பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை படைத்து பெண்கள் பூஜை செய்வார்கள். திருமணமான பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மங்கல நாணை மாற்றிக்கொள்வார்கள்.

காவிரி தாயிடம் பிரார்த்தனை

திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டி காவிரி தாயிடம் பிரார்த்தனை செய்வார்கள். புதுமண தம்பதிகள் தங்கள் மணமாலையை காவிரி ஆற்றில் விட்டு வேண்டி கொள்வார்கள். இதன் காரணமாக ஆடிப்பெருக்கு நாளில் டெல்டாவில் உள்ள காவிரி படித்துறைகள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

ஆடிப்பெருக்கு நாளில் புதுமண தம்பதிகளுக்கு பெற்றோர் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். அந்த சீர்வரிசையில் அவல் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இதற்காகவே விவசாயிகள் அறுவடை முடிந்ததும், ஆடிப்பெருக்கு விழாவிற்காக அவல் இடிப்பதற்கு நெல்லை தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். முன்பு நெல்லை வறுத்து உரலில் வைத்து இடித்து அவல் தயாரித்து வந்தனர். தற்போது நவீன யுகத்தில் மில்லில் நெல்லை கொடுத்து அவல் தயாரித்து வாங்கி செல்கிறார்கள். இந்த ஆண்டு வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

சப்பரம்

விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் உள்ள மில்களில் நெல்லை கொடுத்து அவல் தயாரிப்பதற்காக கூடும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மில்களில் காலை 5 மணிக்கே மக்கள் நீண்ட வரிசையில் அவலுக்கான நெல்லை கொடுப்பதற்காக காத்திருக்கிறார்கள். மதிய நேரத்தில் நெல் கொடுத்தால் மறுநாள் தான் அவல் கிடைக்கிறது என்பதால் அதிகாலையிலேயே மில்லில் காத்திருக்க வேண்டி உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவில் மக்களை மகிழ்விக்கும் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுவது சிறுவர்கள் இழுத்து செல்லும் சிறியவகை சப்பரம். மரத்தால் ஆன இந்த சிறிய வகை சப்பரத்தில் காவிரி தாயின் படம் இடம் பெற்றிருக்கும். இந்த சப்பரத்தை சிறுவர்கள் பயபக்தியுடன் ஆற்றுக்கு கொண்டு செல்வார்கள். அங்கு சப்பரத்துக்கு தீபம் காட்டி வழிபாடு செய்து ஊர்வலமாக வீட்டுக்கு இழுத்து வருவர். இப்படி செய்வது காவிரி தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக ஐதீகம். இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் மரத்தால் ஆன சிறிய சப்பரங்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் சப்பரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் நிரப்ப வேண்டும்

இந்த ஆண்டு மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக கும்பகோணம் பகுதியில் காவிரி ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் ஆடிப்பெருக்கு விழாவை எப்படி கொண்டாடுவது? என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறந்து விட்டாலும், கும்பகோணம் பகுதிக்கு வருவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகும். எனவே ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story