புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் சிக்கல்


புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் சிக்கல்
x
தினத்தந்தி 30 July 2019 11:45 PM GMT (Updated: 30 July 2019 8:28 PM GMT)

புதுவையில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதை அமல் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் நீர்நிலைகள், கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்புகள், பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. எனவே பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவினை கடுமையாக அமல்படுத்தி வருகிறது.

தமிழகத்தை பின்பற்றி புதுவை மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முடிவு செய்தது. ஆனால் அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த (2019) மார்ச் 1-ந்தேதி முதல் புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

அரசின் முடிவினை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர். பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளை உற்பத்தி செய்து பயன்படுத்த கால அவகாசம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று கடந்த பல மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்படாமல் இருந்தது.

ஆனால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை கடுமையாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதையும் மீறி பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அடியோடு குறைந்து விட்டது.

இந்தநிலையில் தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்தன. இதுதொடர்பாக அரசின் மீது விமர்சனங்களும் எழுந்தன.

இதையொட்டி பிளாஸ்டிக் தடையை அமலுக்கு கொண்டு வருவது குறித்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி கடந்த மாதம் 21-ந்தேதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் புதுவை மாநிலத்திலும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (வியாழக்கிழமை) முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அரசாணை நேற்றுவரை வெளியிடப்படவில்லை. இதனால் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது சற்று தள்ளிப்போகிறது. சில பொருட் களுக்கு விற்பனை அளவிலும், தயாரிப்பு அளவிலும் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) முடிவு செய்யப்பட்டு விடும்.

அதன்பின் பிளாஸ்டிக் தடையை எப்போதிருந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

Next Story