புதுச்சேரியில் கலப்படம் நிறைந்த உணவு பொருட்கள் விற்பனை - பாரதீய ஜனதா வேதனை


புதுச்சேரியில் கலப்படம் நிறைந்த உணவு பொருட்கள் விற்பனை - பாரதீய ஜனதா வேதனை
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 31 July 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கலப் படம் நிறைந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பாரதீய ஜனதாவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

புதுவையில் சமீபத்தில் உணவகங்களில் உணவு சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கு உணவு விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா தலமாக விளங்கும் புதுச்சேரியில் குறிப்பிட்ட நாளுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட சிக்கன், மீன், இறைச்சி போன்றவை உணவகங்களில் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து எந்தவித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பெரிய மாநிலங்களில் மாதந்தோறும் உணவு பொருட்கள் பாதுகாப்புத் துறையால் முழு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கு உணவு மற்றும் மருந்து பரிசோதனை துறை செயல் இழந்துள்ளது. பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் கடைகளில் காலாவதியான மற்றும் போலியான தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

கலப்படம் நிறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் மாநிலமாக புதுச்சேரி மாறிவருகிறது. தொடர்ந்து உணவு விஷமாக மாறி மாதந்தோறும் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு மற்றும் பரிசோதனை துறையில் போதிய உதவி ஆய்வாளர்கள் இல்லாததால் அந்த துறை செயலிழந்து வருகிறது. பல இறைச்சி கூடங்கள் உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது.

உரிமம் பெறாத, சுகாதாரமற்ற நிலையில் பல துரித உணவகங்களில் தரக்குறைவான, கலப்படம் நிறைந்த, அதிக ரசாயன வண்ணம் கொண்ட டீத்தூள் வகைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஐ. முத்திரை இடம்பெறாத மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு இடங்களில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தில் புதுவை அரசு கவனம் செலுத்திட வேண்டும்.

புதுச்சேரியில் பல சிற்றுண்டிகள் மற்றும் பலகாரங்கள் விற்கும் கடைகளில் உணவு பொருட்கள், மூடப்படாமல் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பொருட்கள் பாதுகாப்புத்துறை அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story