சட்டவிரோதமாக , விளம்பர பலகைகள் வைத்தால் வழக்கு பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


சட்டவிரோதமாக , விளம்பர பலகைகள் வைத்தால் வழக்கு பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 3:30 AM IST (Updated: 31 July 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விதிமுறைகள்

பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் 2-வது நாளாக நேற்று தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதா கவுன்சிலர் உமேஷ்ஷெட்டி பேசும்போது, “மாநகராட்சி எல்லை பகுதிகளில் விளம்பர பலகைகளை வைப்பதற்கான விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை உருவாக்க இந்த சபையில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், புதிய விதிமுறைகளை உருவாக்கும்படி கடிதம் எழுதியுள்ளது சரியா“ என்றார்.

அதற்கு ஆட்சேபனை தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், பரமேஸ்வர் இந்த சபையில் இல்லாததால், அவரை பற்றி இங்கே பேசுவது சரியல்ல என்றனர். மேயர் உத்தரவுப்படி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பதிலளித்து கூறியதாவது:-

பறக்கும் நடை பாலங்கள்

விளம்பர பலகைகளை வைப்பது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி பொதுமக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது, பாரபட்சமற்ற முறையில் டெண்டர் பணிகள் மேற்கொள்வது குறித்து முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கடிதம் எழுதினார். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பழைய விதிமுறைகளே அமலில் உள்ளன. சில முக்கியமான இடங்களில் பறக்கும் நடை பாலங்கள் அமைக்கப்படுகிறது. ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை உடனே அகற்றும்படி உத்தரவிட்டுள்ளோம். அந்த நிறுவனம் மீது வழக்கு பதியப்படும். சட்டவிரோதமாக விளம்பர பலகைகளை வைக்கும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

வாகன போக்குவரத்து

மீண்டும் பேசிய கவுன்சிலர் உமேஷ்ஷெட்டி, “நகரில் ஆங்காங்கே அறிவியலுக்கு மாறான முறையில் நடை பாலங்கள் அமைக்கப்படுகின்றன. மைசூரு ரோட்டில் குறுகிய தூரத்தில் 2 நடை பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கு என்ன பயன்?. இரவு நேரத்தில் பேய்கள் நடமாட இந்த நடை பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா?“ என்றார்.

அதற்கு பதிலளித்த மஞ்சுநாத் பிரசாத், “மைசூரு ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. சமீபத்தில் விபத்தில் ஒரு மாணவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அங்கு நடை பாலங்கள் கட்டப் பட்டுள்ளன“ என்றார்.

Next Story