குழந்தை பாக்கியத்துக்காக மாத்திரை சாப்பிட்டு மளிகை கடைக்காரர் பலி: போலி ஆயுர்வேத டாக்டர் கைது பரபரப்பு தகவல்கள்
பெங்களூரு அருகே குழந்தை பாக்கியத்துக்காக மாத்திரை சாப்பிட்டு மளிகை கடைக் காரர் பலியான வழக்கில் போலி ஆயுர்வேத டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு அருகே குழந்தை பாக்கியத்துக்காக மாத்திரை சாப்பிட்டு மளிகை கடைக் காரர் பலியான வழக்கில் போலி ஆயுர்வேத டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடைக்காரர் சாவு
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே அரிசினகுன்டே கிராமத்தில் வசித்தவர் சசிதர் (வயது 37). மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கங்காம்பிகா என்ற கங்கம்மா. இந்த தம்பதிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. பல்வேறு மருத்துவமனைகளில் சசிதர், கங்கம்மா ஆகியோர் சிகிச்சை பெற்றனர். ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு சசிதர், கங்கம்மா ஆகியோர் வயிற்று வலியால் அவதிப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிதர் இறந்தார். கங்கம்மாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுபற்றி விசாரணை நடத்தியபோது குழந்தை பாக்கியத்துக்காக அவர்கள் 2 பேரும் மாத்திரைகள் சாப்பிட்டதும், இதில் சசிதர் இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கைது
அப்போது, தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சித்தாபுரா கிராமத்தை சேர்ந்த விஜய் குமார் (வயது 30), மாருதி, சித்தய்யா ஆகியோர் தம்பதியிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பெற்று கொண்டு குழந்தை பாக்கியத்துக்கான மாத்திரைகள் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடினார்கள்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய் குமாரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் விஜய் குமார், தனது நண்பர்களான மாருதி, சித்தய்யா ஆகியோருடன் சேர்ந்து தங்களை ஆயுர்வேத டாக்டர்கள் என சசிதர்-கங்கம்மா தம்பதியிடம் அறிமுகம் செய்து கொண்டதோடு, குழந்தை பாக்கியத்துக்கான மாத்திரைகள் கொடுத்து பணம் வசூலித்தது தெரியவந்தது. அத்துடன் தலைமறைவாக உள்ள மாருதி, சித்தய்யா ஆகியோரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பரபரப்பு தகவல்கள்
இதற்கிடையே, விஜய் குமாரின் சொந்த ஊரான சித்தாபுரா பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சித்தாபுரா கிராமத்தில் மொத்தம் 40 வீடுகள் உள்ளன. ஆயுர்வேத மருத்துவம் குறித்து படிக்காத நிலையிலும் கூட வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் ஆயுர்வேத டாக்டர் எனக்கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியை நாடும் அவர்கள் ரூ.25 ஆயிரம் வசூலித்து கொண்டு சில மாத்திரைகள் வழங்கி குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மோசடி செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story