இளம்பெண் கொலை வழக்கு, தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண் கொலை வழக்கு, தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 31 July 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் கொலை வழக்கில் தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 24). தறி தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கலா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கலா கணவரை இழந்தவர். பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதையடுத்து கலா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரிடம் வற்புறுத்தினார். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2009-ம் அக்டோபர் மாதம் கலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலம் அருகே உள்ள பெருமாள் கோவில் கரடு பகுதிக்கு குமார் அழைத்து சென்றார்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் கலாவை சேலையால் கழுத் தை நெரித்து கொலை செய்தார். அவரின் உடலை குமாரால் மறைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தனது உறவினர்களான ஆறுமுகம் (45) மற்றும் முருகன் (24) ஆகியோரை அழைத்து வந்து உடலை சாக்குப்பையில் கட்டி ஆத்துக்காடு பகுதியில் வீசி விட்டு சென்று விட்டனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து குமார் மற்றும் ஆறுமுகம், முருகன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும், உடலை மறைக்க உதவிய ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story