விருத்தாசலம் அருகே, போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தில் மணல் கடத்தலை தடுப்பதற்காக ஆலடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் மணல் கடத்துவதாக கூறி அவரை போலீசார் பிடிப்பதற்காக துரத்தினர். ஆனால் நீலகண்டன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
அப்போது அப்பகுதியில் இருந்த முட்புதர்களில் விழுந்து நீலகண்டன் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அங்குள்ள விருத்தாசலம்-சேந்தநாடு சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், ஆலடி போலீசாரை கண்டித்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பாவி மக்கள் மீது போலீசார், பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story