குன்னூர் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி


குன்னூர் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 31 July 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

குன்னூர்,

கேரள எல்லையான முள்ளிப்பகுதியில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குட்டி யுடன் 4 யானைகள் கொலக்கொம்பை பகுதியில் உள்ள டெரேமியா பகுதிக்கு வந்தன. அங்கு இருந்த வாழை, மேரக்காய் உள்ளிட்ட பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன. இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர்.

இதையடுத்து அவைகள் அருகில் இருந்த கோடேரி கிராமப் பகுதிக்குள் நுழைந்தன. இதனால் அந்த பகுதியில் பச்சை தேயிலை பறிக்கும் பணி மற்றும் விளைநிலங்கள் பராமரிப்பு பணி ஆகியவை பாதிக்கப்பட்டன.

இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு டெரேமியா குடியிருப்பு பகுதியில் நுழைந்தன. பின்னர் அங்கிருந்த தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசம் செய்தன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனால் பந்தம் கொளுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் யானைகள் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் டெரேமியா பகுதியை கடந்து சென்றன. யானைகள் நடமாட்டத்தால் நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் விடிய விடிய தூங்காமல் விழித்து இருந்தனர். டெரேமியா பகுதியை விட்டுசென்ற யானைகள் அருகிலுள்ள கோடேரி கிராமத்திற்குள் புகுந்தன. இதனால் கோடேரி கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் வனத்துறையினர் வாகனம் மூலம் சைரன் எழுப்பி சென்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story