திருப்பரங்குன்றம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட காப்பகத்தில் 3 முதியோர் சித்ரவதை; அதிகாரிகள் மீட்டனர்
திருப்பரங்குன்றம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட காப்பகத்தில் சித்ரவதை செய்யப்பட்ட 3 முதியோர்களை போலீசார் உதவியுடன் தாசில்தார் மற்றும் மத்திய சமூகநலத்துறை அதிகாரி ஆகியோர் மீட்டனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் திருப்பதிநகரில் வாடகை வீட்டில் மனநலம் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. கடந்த 7 மாதத்திற்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் தற்போது புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி, யாகப்பாநகர் குருசோதைபால், துரைசாமிநகர் செல்வி ஆகிய 3 முதியோர்கள் தங்கியிருந்தனர். காப்பகத்தில் மேலாளராக ஷீலா என்பவர் இருந்து கவனித்து வந்தார்.
இந்தநிலையில் அந்த காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு முறையாக உணவு கொடுப்பது இல்லை என்றும், அவர்களை வீட்டிற்குள்ளே ஒரு அறைக்குள் பூட்டி வைத்து அவ்வப்போது சித்ரவதை செய்ததாகவும் புகார் வந்தது. மேலும் வீட்டின் வெளியே பூட்டு போட்டுவிட்டு இரவு நேரங்களில் பாலியல் தொழில் நடப்பதாகவும் புகார் எழுந்தது.
இந்த புகார்களை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன் நேற்று அந்த காப்பகத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். உடன் ஆஸ்டின்பட்டி போலீசாரும் வந்தனர். இதற்கிடையே அதிகாரிகள் வருவதை கண்டு காப்பகத்தின் வெளிப்புற அறையிலிருந்த இருந்த பெண்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் மத்திய சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாக அலுவலர் பிரேமலதா மற்றும் விக்னேஷ்வரி ஆகியோர் பூட்டிய அறைக்குள் இருந்த முதியவர்களிடம் ஜன்னல் வழியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியோர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. முறையான உணவு இல்லை. பட்டினியால் தவிக்கிறோம். எங்களை மீட்டு பாதுகாப்பான அரசு காப்பகத்தில் அல்லது அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கண்ணீர் மல்க முறையிட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் பூட்டிய அறைக்குள் இருந்த 3 முதியோர்களை மீட்டனர். பின்னர் அவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் காப்பக மேலாளர் ஷீலா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சமூக நலத்துறையின் பெண்கள் சேவை மைய நிர்வாக அலுவலர் பிரேமலதா ஆஸ்டின்பட்டி போலீசாரிடம் கூறினார். அதன்பேரில் போலீசார் ஷீலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய சமூக நலத்துறை பெண்கள் சேவை மைய நிர்வாக அலுவலர் பிரேமலதா கூறும்போது, இந்த காப்பகம் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி காப்பகம் என்ற பெயரில் பாலியல் தொழிலும் செய்து வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காப்பகம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.