இரட்டை கொலை வழக்கு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு


இரட்டை கொலை வழக்கு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 4:00 AM IST (Updated: 31 July 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள பெரியதளிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 66). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (30) என்பவரது விவசாய நிலத்தின் அருகே, 31 சென்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அப்போது மாதேஷ், எனது நிலத்தின் அருகே உள்ள நிலத்தை நீ எப்படி வாங்கலாம்? என தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி தான் வாங்கிய நிலத்தில் பூஜை போட்டு, விவசாய பணியை தொடங்க ராமஜெயம் மற்றும் அவரது மகன் இளையராஜா (27) ஆகியோர் அங்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த மாதேஷ், அவரது தாய் கலைவாணி (60), அக்காள் பிரேமா(42) ஆகியோர் அங்கு சென்று அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் ராமஜெயம், இளையராஜா ஆகியோரை சரமாரியாக தாக்கினர். மேலும் மாதேஷ் அரிவாளால் தந்தை, மகன் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். அதில், ராமஜெயம் மற்றும் அவரது மகன் இளையராஜாவை கொலை செய்த குற்றத்திற்காக மாதேஷ், கலைவாணி, பிரேமா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜரானார்.

Next Story