கோவில்பட்டியில் காங்கிரசார் திடீர் சாலைமறியல்
கோவில்பட்டியில் காங்கிரசார் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது பாலியல் புகார் கூறிய 17 வயது சிறுமி, கோர்ட்டுக்கு சென்று திரும்பியபோது, அவரது காரின் மீது லாரி மோதியது. இதில் அந்த சிறுமியின் தாயும், அத்தையும் உயிரிழந்தனர். அந்த சிறுமியும், அவரது வக்கீலும் படுகாயம் அடைந்தனர்.
ஏற்கனவே அந்த சிறுமியின் தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்தார். பின்னர் அந்த சிறுமியின் மாமாவும் மர்மமாக இறந்தார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் கூறிய சிறுமியை லாரியை ஏற்றி கொல்ல முயன்றதாகவும், சாட்சிகளைக் கலைப்பதற்காக அவரது குடும்பத்தையே தீர்த்து கட்டியதாக கூறியும், இதனைக் கண்டித்தும், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய நுழைவுவாயிலில் காங்கிரசார் நேற்று காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா தலைமை தாங்கினார். மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம் ராய் மணி, மாநில பொதுச்செயலாளர்கள் வின்ஸ் எல்ஜின், ஸ்டாலின், கருப்பசாமி, பொன் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பஸ் நிலைய பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story