விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் - நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை


விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் - நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2019 3:30 AM IST (Updated: 1 Aug 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கான பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனினும் இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. மேலும் மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைக்கும் பணியும் முழுமையாக முடிக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள போதிய அக்கறை காட்டாத நிலையே நீடிக்கிறது.

தமிழக அரசு நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், மேம்பாலங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் மூலம் நிலத்தடிநீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் மழை பெய்யும் போது வழிந்தோடும் மழைநீரை சேகரித்து குழாய் மூலம் ராமமூர்த்தி ரோடு-ரெயில்வே பீடர் ரோடு சந்திப்பில் ரெயில் நிலையத்தில் இருந்து வேலாயுத ஊருணிக்கு செல்லும் குழாயுடன் இணைத்தால் மேம்பாலத்தில் இருந்து வரும் மழைநீர் வேலாயுத ஊருணியில் பெருகுவதோடு, அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெருக வாய்ப்பு ஏற்படும்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துடன் கலந்தாய்வு செய்து ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தவும், இதனை வேலாயுத ஊருணிக்கு கொண்டு சேர்க்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story