ஈரோட்டில் நள்ளிரவில் விபத்து, தாறுமாறாக ஓடிய கார் மோதி 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்


ஈரோட்டில் நள்ளிரவில் விபத்து, தாறுமாறாக ஓடிய கார் மோதி 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
தினத்தந்தி 1 Aug 2019 4:15 AM IST (Updated: 1 Aug 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

ஈரோடு,

ஈரோடு புதிய மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. இந்த கார் மேம்பாலத்தில் இருந்து இறங்கி ஈ.வி.என். ரோட்டிற்கு சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதத்தொடங்கியது.

ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 10 மோட்டார்சைக்கிள்களை இந்த கார் சேதப்படுத்தி நின்றது. அதைத்தொடர்ந்து கார் டிரைவர் கீழே இறங்கி பார்த்துள்ளார். உடனே அங்கிருந்து பொதுமக்கள் அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அவர் மீண்டும் காரை எடுத்துக்கொண்டு ஈ.வி.என். ரோட்டில் சீறிப்பாய்ந்தார். பின்னர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ஈரோடு-சென்னிமலை ரோடு ரெயில்வே பணிமனை அருகில் அந்த காரை மடக்கினர். பின்னர் காரை ஓட்டிசென்றவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக்குமார் (வயது 20) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தீபக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story