கற்பழித்த பெண்ணுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை


கற்பழித்த பெண்ணுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2019 5:00 AM IST (Updated: 1 Aug 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட பங்கர்மாவ் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட பங்கர்மாவ் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்.

சிறுமி கற்பழிப்பு

இவர் கடந்த 2017-ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமி ஒருவரை கற்பழித்தார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி எம்.எல்.ஏ.வை கைது செய்தனர். அத்துடன் அவரை பா.ஜனதாவும் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

இதைத்தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுமாறு குல்தீப் சிங் எம்.எல்.ஏ. சார்பில் அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று மிரட்டி வந்தனர். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத அந்த பெண், வழக்கை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

லாரி மோதியது

இந்த நிலையில் கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன் கடந்த 28-ந் தேதி ரேபரேலி மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. அந்த லாரியின் பதிவு எண்ணும் மறைக்கப்பட்டு இருந்தது.

இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அத்தைமார் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பெண்ணும், வக்கீலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசில் புகார்

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ. மீது கொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெறாததால், அவரது ஏற்பாட்டின் பெயரில் இந்த விபத்து நடந்திருப்பதாக அந்த பெண்ணின் மாமாவும், விபத்தில் உயிரிழந்த அத்தை ஒருவரின் கணவருமான மகே‌‌ஷ் சிங் என்பவர் போலீசில் புகார் செய்தார்.

எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்கியதும், தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அவரது ஆட்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

மகே‌‌ஷ் சிங்கின் மனைவியின் உடல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கங்கை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கும் மகே‌‌ஷ் சிங்கும் பரோலில் வந்து இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

சி.பி.ஐ. விசாரணை

கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கும் சம்பவம் அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் இந்த வழக்கை உள்ளூர் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட லக்னோ சி.பி.ஐ. அதிகாரிகள், இது தொடர்பாக எம்.எல்.ஏ. மற்றும் சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்ட அவர்கள், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தலைமை நீதிபதிக்கு கடிதம்

முன்னதாக எம்.எல்.ஏ.வின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதி இருந்தார். குறிப்பாக கடந்த மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் தங்கள் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவர் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

ஆனால் இந்த கடிதம் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்த கடிதம் தொடர்பாக ஊடகங்களில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. குறிப்பாக இந்த கடிதத்தை தலைமை நீதிபதி வாசித்திருப்பாரா? என்பது போல அந்த செய்திகளில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதத்தை ஏன் எனது கவனத்துக்கு கொண்டு வரவில்லை? என கோர்ட்டின் செயலாளரிடம் கேள்வி எழுப்பிய ரஞ்சன் கோகாய், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதாவது செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த விசாரணையின் நிலை குறித்து நாளை (இன்று) அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் விசாரணையையும் இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தியதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தாவில் நேற்று பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின.

Next Story