புனித ஹஜ் பயணத்துக்காக சென்னையில் இருந்து 423 பேருடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது
புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் சென்னையில் இருந்து 423 பேருடன் புறப்பட்டு சென்றது.
ஆலந்தூர்,
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4,464 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புனித ஹஜ் பயணத்துக்காக சென்னையில் இருந்து முதல் விமானம் நேற்று சவுதிஅரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 213 பெண்கள் உள்பட 423 பேர் பயணம் செய்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும்.
புனிதஹஜ் பயணத்துக்கு சென்றவர்களை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் இர்பான் அகமது, சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுத்தின், விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு பகுதியில் விமானங்களில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் வருவதால் ஹஜ் பயணத்துக்காக வரும் பயணிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கினால் சிரமங்கள் வரும் என்பதால் கட்டி முடித்து பயன்படுத்தப்படாமல் இருந்த புதிய முனையத்தை புறப்பாடு முனையமாக மாற்றி அதில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் இருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5–ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.
ஹஜ் பயணிகளை வழியனுப்பி வைத்துவிட்டு தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4,464 பேர் புனித ஹஜ் பயணத்துக்கு செல்கின்றனர். தமிழக முதல்–அமைச்சர் தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடியை மானியமாக வழங்கி உள்ளார். இதில் ஒருவருக்கு ரூ.16 ஆயிரம் மானியமாக கிடைக்கும்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இறைவனின் அருளால் அவர்களின் பயணம் நிறைவேற பிரார்த்திக்கிறேன். தமிழகத்திற்கு கூடுதல் ஹஜ் பயணிகள் செல்ல கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 910 பேர் செல்வதற்கு நடவடிக்கை எடுத்த முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.