முத்தலாக் மசோதா நிறைவேறியதால் முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை - சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிக்கை


முத்தலாக் மசோதா நிறைவேறியதால் முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை -  சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2019 4:40 AM IST (Updated: 1 Aug 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

முத்தலாக் மசோதா நிறைவேறியதால் முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையில் நம் நாட்டில் இதுநாள் வரை முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியான முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்யும் சட்டத்தை உருவாக்கும் மசோதாவை பிரதமர் மோடி நிறைவேற்றி இருப்பதை புதுவை பாரதீய ஜனதா பெருமகிழ்ச்சியோடு வரவேற்கிறது. பெண் அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழித்து பெண்ணுரிமை வழங்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

முத்தலாக் என்ற முறை மூலம் விவாகரத்து வழங்கி முஸ்லிம் சகோதரிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதோடு, குழந்தைகளின் எதிர்காலமும் பாழாக்கப்படும் நிலையை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? பெண்ணுரிமையை நிலைநாட்டும் இந்த மகத்தான வெற்றி நம் நாட்டில் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டிய ஒரு சட்டம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நம் நாட்டு பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே, பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே 50 ஆயிரமாக இருந்த வங்கிக்கடனை ரூ.1 லட்சமாக உயர்த்தினார். முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க உடனடியாக இந்த மசோதாவை பிரதமர் பதவி ஏற்ற சில நாட்களிலேயே கொண்டு வந்துள்ளார்.

பெண்ணுரிமை பற்றியும், பெண்ணுக்கு சம உரிமை பற்றியும் பேசும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு இந்த மசோதவை எதிர்க்காமல், பெண்ணுரிமை நிலை நாட்டப்பட்டதற்காக தங்களது மகிழ்ச்சியை பொதுமக்களோடு கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story