பேரண்டப்பள்ளி காட்டுக்கு விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் கெலவரப்பள்ளி அணைக்கு வந்தன கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை


பேரண்டப்பள்ளி காட்டுக்கு விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் கெலவரப்பள்ளி அணைக்கு வந்தன கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2019 3:30 AM IST (Updated: 2 Aug 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

பேரண்டப்பள்ளி காட்டுக்கு விரட்டப்பட்ட காட்டு யானைகள் மீண்டும் கெலவரப்பள்ளி அணைக்கு வந்தன. இதனால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர்,

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் 2 யானைகள் நீண்ட நாட்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யானைகள் பேரண்டப்பள்ளி வனப்பகுதியிலிருந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள தைலத்தோப்பில் புகுந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 யானைகளும் கெலவரப்பள்ளி அணையில் உற்சாக குளியல் போட்டன. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானைகள் தாக்கியதில் பசவராஜ் என்ற வன ஊழியர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கிடையே 2 யானைகளையும் வனத்துறையினர் போராடி பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

இந்தநிலையில் பேரண்டப்பள்ளிக்கு விரட்டப்பட்ட காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கெலவரப்பள்ளி அணை பகுதிக்கு திரும்பி வந்தன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் அந்த 2 யானைகளையும் பேரண்டப்பள்ளி காட்டுக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

அத்துடன் கிராம மக்கள் விழிப்புடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்லக்கூடாது என்றும், இரவில் வீட்டை விட்டு வெளியே வர நேர்ந்தால், டார்ச் லைட் அடித்தவாறு வெளிவர வேண்டும் என்றும், கெலவரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா அடித்து வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story