தென்காசி புதிய மாவட்ட கருத்து கேட்பு கூட்டம் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது
தென்காசி புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
நெல்லை,
தென்காசி புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
கருத்து கேட்பு கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபையில் நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால், தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என அறிவித்தார்.
இந்த புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலாளர் மற்றும் நிர்வாக ஆணையாளர் சத்தியகோபால் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கருத்து கேட்க உள்ளார்.
இது தொடர்பான கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2-வது மாடியில் நடைபெறுகிறது. அன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நெல்லை, சேரன்மாதேவி ஆகிய வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
குற்றாலத்தில்...
இதையடுத்து வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தென்காசி கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
எனவே, புதிய மாவட்டம் தொடர்பாக எழுத்து மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் மேற்கண்ட தேதியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story