பழனி அருகே, சாலையோரம் நிறுத்தி இருந்த அரசு பஸ் கடத்தல் - வயலுக்குள் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்


பழனி அருகே, சாலையோரம் நிறுத்தி இருந்த அரசு பஸ் கடத்தல் - வயலுக்குள் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2019 4:15 AM IST (Updated: 2 Aug 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ் கடத்தப்பட்டது. பஸ்சை வயலுக்குள் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கீரனூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி அருகே உள்ள கீரனூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அலங்கியம், பெரிச்சிபாளையம் வழியாக இயக்கப்படும் இந்த பஸ் இரவு 10.30 மணிக்கு கீரனூர் வரும். இரவு கீரனூரில் நிறுத்தி வைக்கப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் கீரனூரில் இருந்து தாராபுரத்துக்கு புறப்பட்டு செல்லும்.

அதன்படி வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு தாராபுரத்தில் இருந்து கீரனூருக்கு அரசு பஸ் வந்தது. டிரைவர் சிவக்குமார் பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டராக அமுதன் இருந்தார். வழக்கம்போல் அவர்கள் பஸ்சை கீரனூரில் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தூங்க சென்று விட்டனர்.

நேற்று அதிகாலையில் எழுந்த டிரைவர் சிவக்குமார், கண்டக்டர் அமுதன் ஆகியோர் பஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கீரனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து பஸ்சை தேடும் பணியை தொடங்கினர்.

அப்போது தொப்பம்பட்டி-தாழையூத்து சாலையில், வாய்க்கால் பாலம் அருகில் உள்ள வயலில் அரசு பஸ் நிற்பது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பஸ்சை பார்வையிட்டனர். அங்குள்ள வயலில் பஸ் இறங்கி நின்றது. பஸ்சின் முன்பக்க டயர் சேதமாகி இருந்தது.

விசாரணையில் மர்ம நபர்கள் கம்பி அல்லது வேறொரு சாவி கொண்டு பஸ்சை இயக்கி கடத்தி சென்றனர். அப்போது தாழையூத்து சாலையில் வயலில் விட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு பஸ் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் யார்? திருடும் நோக்கில் பஸ்சை எடுத்து வந்தனரா? அல்லது போதையில் எடுத்து வந்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ்சை திருடி கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story