மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில், வெளியூர்களில் வசிக்கும் நீலகிரி விவசாயிகளும் பயனடையலாம் - கலெக்டர் தகவல்
மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் வெளியூர்களில் வசிக்கும் நீலகிரி மாவட்ட விவசாயிகளும் பயனடையலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
இந்த நிதியாண்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக 2 ஹெக்டர் வரை அரசு ஆவணங்களின்படி விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டிற்கான முதல் தவணை தொகை 1.12.2018 முதல் 31.3.2019 வரை உள்ள காலத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு விவசாய குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் 18 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் அனைவருக்குமாக சேர்த்து வேளாண் கணக்கெடுப்புபடிவத்தில் உள்ளபடி 2 ஹெக்டர் வரை நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 2 ஹெக்டருக்கு மேல் சொந்த விவசாய நிலம் உள்ள இதர விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். அனைத்து நிறுவனம் சார்ந்த நிலத்தின் உரிமையாளர்கள், அரசியலமைப்பு பதவி வகித்தவர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் உள்ளிட்டோர் பயன்பெற இயலாது.
கூட்டுபட்டா இருந்தால் பட்டாவில் உள்ள விவசாயிகளின் அனுபோக பரப்பினை கணக்கில் கொண்டு விவசாயிகள் பயனாளிகளாக சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவராயின் அவர்களுள் மூத்த நபரின் வங்கி கணக்கிற்கு மட்டுமே தொகை வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கொண்ட வெளியூர்களில் வசிக்கும் விவசாயிகள் தகுதி உடையவர்கள். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தனிப்பட்ட விவரங்களான ஆதார் எண், வங்கி கணக்கு எண், நிலத்தின் சர்வே எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் போன்றவற்றுடன் தாசில்தார் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
பதிவு செய்த விவசாயிகள் சுய உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். மேலும் வெளியூர்களில் வசிக்கும் விவசாயிகள் பெயர்கள் நீலகிரி மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆகவே வெளியூர்களில் வசிக்கும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயர்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து தாசில்தார் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story