மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற மருந்துக்கடை உரிமையாளர் கைது
காரைக்காலில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்,
காரைக்காலில் சமீபகாலமாக மருந்து கடைகளில் போதை தரும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது . இதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் அடிமையாகி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் மாவட்ட சிறப்பு அதிரடிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள ஒரு மருந்துக் கடையை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 18 வயதுக்கும் குறைவான மாணவர் ஒருவரிடம் டாக்டர் பரிந்துரைத்த சீட்டு எதுவுமின்றி போதை தரும் மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மருந்துக்கடை உரிமையாளர் தலத்தெருவை சேர்ந்த வித்யகுமார் (வயது 44) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரது கடையில் இருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து கூறுகையில், ‘மருந்துக் கடைகளில் டாக்டர்களின் ஆலோசனை, பரிந்துரை சீட்டு போன்றவை இல்லாமல் போதை தரும் மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மருந்துக் கடைகாரர்களுக்கு உரிய ஆலோசனை, அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான கூட்டம் விரைவில் நடத்தப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story