மனைவிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வர அட்டாக் பாண்டிக்கு அனுமதி - மதுரை ஐகோர்ட்டு அளித்தது


மனைவிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வர அட்டாக் பாண்டிக்கு அனுமதி - மதுரை ஐகோர்ட்டு அளித்தது
x
தினத்தந்தி 2 Aug 2019 4:00 AM IST (Updated: 2 Aug 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

அட்டாக் பாண்டி மனைவிக்கு அறுவை சிகிச்சை நடக்கும் போது, அவரை ஆஸ்பத்திரிக்கு வந்து அட்டாக் பாண்டி பார்ப்பதற்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மதுரை, 

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது வேளாண் விற்பனை குழு தலைவராக இருந்தார். 2007-ம் ஆண்டில் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரது மனைவி தயாளு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு சமீபகாலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பரிசோதித்த டாக்டர்கள், எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு நீண்ட நாளாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவர் அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு (பரோல்) வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அட்டாக்பாண்டிக்கு தற்போது பரோல் வழங்கும்படி உத்தரவிட இயலாது. அதேநேரத்தில் அவருடைய மனைவி தயாளுவுக்கு அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பாகவும், அறுவை சிகிச்சை முடிந்த பின் சில மணி நேரங்களும் அட்டாக்பாண்டி தனது மனைவியுடன் ஆஸ்பத்திரியில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. அவர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டு, மீண்டும் சிறைக்கு திரும்பும் வரை உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

Next Story