‘வேறு ஒருவன் மூலம் பிறந்ததால் குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்தேன்’ கைதான தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்


‘வேறு ஒருவன் மூலம் பிறந்ததால் குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்தேன்’ கைதான தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்
x
தினத்தந்தி 3 Aug 2019 4:30 AM IST (Updated: 2 Aug 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

‘வேறு ஒருவன் மூலம் பிறந்ததால் 2 வயது குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தினேன்’ என்று கைதான தாயின் கள்ளக்காதலன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர், 

வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை கடந்த மாதம் 26-ந்தேதி உடல்நலக்குறைவால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், குழந்தையின் உடல் முழுவதும் சூடு வைத்த தழும்புகளும், பிறப்புறுப்பில் காயங்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள், வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேரில் வந்து பெண் குழந்தையைப் பார்த்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பெண் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து நிஷாந்தினி, வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், தாயின் கள்ளக்காதலன் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தைச் சேர்ந்த பெயிண்டர் அருண் உதயகுமார், பெண் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து, அடித்துத் துன்புறுத்தி உள்ளார். அதை தட்டிக்கேட்டால் கள்ளக்காதலன் பிரிந்து சென்று விடுவார், என்ற பயத்தில் அந்தப் பெண் குழந்தையின் தாயார் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

அதையடுத்து பெண் குழந்தையின் உடலில் சூடு வைத்து துன்புறுத்தல் செய்ததற்கு உடந்தையாக இருந்த தாயாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் பெண் குழந்தைக்கு சூடு வைத்து துன்புறுத்திய தாயாரின் கள்ளக்காதலன் அருண் உதயகுமாரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அருண் உதயகுமார் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்று தீவிரமாக கண்காணித்த போலீசார் சிறிது நேரத்தில் பஸ்சில் வந்து இறங்கிய அருண் உதயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், ‘அருண் உதயகுமாருக்கு குழந்தையின் தாயுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் ஒரே வீட்டில் ‘லிவிங் டு கெதர்’ முறையில் வாழ்ந்து வந்ததாகவும், குழந்தையை விட்டு பிரிந்து தாய் வர மறுத்ததாகவும், வேறு ஒருவர் மூலம் அந்த குழந்தை பிறந்தது என்பதால் அதனை பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் வந்தது. அதனால் குழந்தையின் உடலில் சூடு வைத்து துன்புறுத்தினேன்’ என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடாந்து போலீசார் வேலூர் கோர்ட்டில் அருண்உதயகுமாரை ஆஜர்படுத்தி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

Next Story