மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக உயர்வு ஆடிப்பெருக்கு பண்டிகைக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக உயர்வு ஆடிப்பெருக்கு பண்டிகைக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 3 Aug 2019 4:15 AM IST (Updated: 3 Aug 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக உயர்ந்தது. மேலும் ஆடிப்பெருக்கு பண்டிகைக்காக கூடுதலாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர், 

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கைகொடுக்கவில்லை. வழக்கம் போல இந்த ஆண்டும் தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் திறக்கப்படும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணையை வந்தடைந்தது. அப்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக இருந்தது.

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 10 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. இதன்படி நேற்று காலை அணையின் நீர்மட்டம் 50.15 அடியை எட்டியது. அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 11.30 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் 14-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது தான் 50 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்திலோ அல்லது கர்நாடகத்திலோ தீவிரமாக பெய்தால் மட்டுமே டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

Next Story