ஆம்பூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு


ஆம்பூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Aug 2019 4:00 AM IST (Updated: 3 Aug 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும், அதைத்தொடர்ந்து ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆனால் இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெறவில்லை. அதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினரும், ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சச்சிதானந்தம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தாசில்தார் சுஜாதா ஆகியோரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த மண்டபத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேர் மீது ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தாசில்தார் சுஜாதா புகார் அளித்தார். அதன்பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த், மண்டப உரிமையாளர் என்.எம்.ஜக்ரியா ஆகியோர் மீதும் தொழிற்சாலையில் அனுமதியின்றி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர் பரிதா பாபு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது 171 எப் (அனுமதியின்றி கூடுதல்), 171 சி (வாக்குரிமையில் தலையிடுதல்)மற்றும் 188 (தேர்தல் விதியை மதிக்காதது)ஆகிய பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story