திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை


திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 3 Aug 2019 3:15 AM IST (Updated: 3 Aug 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நுழைவுவாயில்களை மூடியதால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, 

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் என்ஜின் பராமரிப்பு, புனரமைப்பு, வேகன்கள் தயாரிப்பு, வீல்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பணிமனையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிமனையில் பிரதான நுழைவு வாயில் ஆர்மரி கேட் பகுதியாகும்.

இதேபோல மற்றொரு நுழைவு வாயில் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த நுழைவு வாயிலின் வழியாக பணிமனைக்குள் லாரிகள் வந்து செல்லும். மேலும் ஊழியர்கள் பணிக்கு வருவது உண்டு. ரெயில்வேயில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (விஜிலென்ஸ்) தனியாக இயங்கி வருகிறது. இந்த பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்துவது உண்டு.

இந்த நிலையில் பொன்மலை ரெயில்வே பணிமனைக்குள் சென்னையில் இருந்து வந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று பகல் 11 மணி அளவில் அதிரடியாக நுழைந்தனர். மேலும் பணிமனையில் உள்ள ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஊழியர்கள் வருகைப்பதிவு, பொருட்கள் வருகை மற்றும் வெளியே அனுப்புதல் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா? என பார்வையிட்டனர்.

இதேபோல ஆர்மரி கேட் மற்றும் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மேற்கு நுழைவுவாயிலில் லாரிகள் வந்து செல்லும்போது டிரைவரிடம் பணம் வாங்கிய ஒருவர் சிக்கினார். அவரை பிடித்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் ரெயில்வே ஊழியர் அல்லாதவர் எனவும், புரோக்கர் போல செயல்பட்டு டிரைவர்களிடம் பணம் வசூலித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்கள் சிலரிடம் வழங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பகல் 12.30 மணி அளவில் நுழைவு வாயில்களை மூட ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் நுழைவுவாயில்களை மூடினர். இதனால் பணிமனையில் இருந்து ஊழியர்கள் வெளியே வர முடியாமலும், பணிமனைக்குள் பணிக்கு ஊழியர்கள் செல்ல முடியாமலும் நுழைவுவாயிலில் தவித்தனர்.

அப்போது எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். சோதனை நடத்த எந்தவித எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை எனவும், பணிமனை நுழைவுவாயிலை மூட தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் இல்லை என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் முறையிட்டனர். இதனால் ஆர்மரிகேட் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நுழைவு வாயிலை திறந்து விட அறிவுறுத்தினர். அதன்பின் நுழைவு வாயில் கதவுகள் திறந்து விடப்பட்டன. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் பணிமனைக்குள் பணிக்கு சென்றனர். இதற்கிடையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை மாலை 4 மணி அளவில் முடிவடைந்தது. இந்த சோதனை குறித்து ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் கேட்டபோது, இது வழக்கமான சோதனை தான், ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவது உண்டு, என்று மழுப்பலாக தெரிவித்தனர். லாரி டிரைவர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்ட ஒருவர் சிக்கியது பற்றி கேட்டபோது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பணிமனை வட்டாரத்தில் விசாரித்தபோது கூறுகையில், “பணிமனையில் மேற்கு நுழைவு வாயில் வழியாக லாரிகள் வந்து செல்லும். லாரிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வரும். இவ்வாறு வரும்போது லாரி டிரைவர்களிடம் ரூ.50, ரூ.100 என வசூலிப்பது உண்டு. இதனை புரோக்கர் போல செயல்படும் ஒருவர் வசூலித்து, அங்குள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் காரர்கள் சிலரிடம் கொடுப்பார். இவ்வாறு டிரைவரிடம் வாங்கும்போது அந்த நபர் சிக்கினார்” என்றனர்.

Next Story